இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐ.நா பேரவையில் நாளை (06) சமர்ப்பிப்பு

இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐ.நா பேரவையில் நாளை (06) சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Oct, 2022 | 6:15 pm

Colombo (News 1st) இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாளை (06) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பலம் வாய்ந்த நாடுகள் கூட்டாக இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். 

மனித உரிமையை ஆயுதமாக பயன்படுத்தி இலங்கையை வாழ்நாள் முழுவதும் கட்டுப்படுத்த அந்நாடுகள் முயற்சிப்பதாக ஜெனிவாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அலி சப்ரி தெரிவித்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, வடக்கு அயர்லாந்து, வடக்கு மசிடோனியா, ஜெர்மன், மலாவி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மத்திய குழு இந்த தீர்மானத்தின் வரைபை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் 19 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன் முதலிரண்டு விடயங்களிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோசனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள 19 விடயங்களில் 9 விடயங்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மை நாட்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்பின்மை, பாரிய எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய மருந்து பற்றாக்குறை மற்றும் குடும்ப அலகுகளின் வருமானம் குறைதல் போன்ற விடயங்கள் தொடர்பில் அவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலை காரணமாக மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதியான போராட்டங்களில் கலந்துகொண்டவர்களை கைது செய்தல் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறையின் போது உயிரிழப்புகள் –  காயங்கள் – சொத்துகள் அழிப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை உடனடியாக விசாரணை செய்து, அதற்கு பொறுப்பான தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்க அதிகாரிகள் தொடர்பில் சுயாதீனமான, பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய குழு, மனித உரிமைகள் பேரவைக்கு பரிந்துரைத்துள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதை நிறுத்தவும், அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும் குறித்த யோசனையின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை அமர்வில் ஆணையாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்று வரும் பொருளாதார குற்றங்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்