இலங்கையில் நான்கில் ஒருவருக்கு மனிதாபிமான உதவி தேவை: சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை

இலங்கையில் நான்கில் ஒருவருக்கு மனிதாபிமான உதவி தேவை: சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை

இலங்கையில் நான்கில் ஒருவருக்கு மனிதாபிமான உதவி தேவை: சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை

எழுத்தாளர் Bella Dalima

05 Oct, 2022 | 6:35 pm

Colombo (News 1st) இலங்கையின் பொருளாதார நெருக்கடி, சுகாதாரம், உணவு மற்றும் சமூக பாதுகாப்பு உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபையினால் 57 பக்கங்களை கொண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக மக்கள்  பட்டினியாலும் வறுமையாலும் வாடுவது, அவர்களின் மனித உரிமைகளை மீறும் செயல் என சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலையில் முட்டையின் விலை வருடமொன்றுக்குள் 124.1 வீதத்தினாலும் பருப்பு விலை 185.9 வீதத்தினாலும் உருளைக்கிழங்கு விலை 125.3 வீதத்தினாலும் சீனி விலை 151.1 வீதத்தினாலும் உயர்வடைந்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் மருந்துப் பொருட்களின் விலையை 40 வீதத்தினால் அதிகரிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியதுடன், ஆகஸ்ட் மாதத்திற்குள் 2 உயிர் காக்கும் மருந்துகள் உட்பட 188 அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,724 அத்தியாவசிய அறுவை சிகிச்சை சாதனங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும்  சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 6.2 மில்லியன் மக்கள் அதாவது 28% மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  5.7 மில்லியன் மக்கள் அதாவது சனத்தொகையில் நான்கில் ஒரு வீதமானோருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரிப்பு தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரிப்பு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையின் பிரகாரம், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒருவர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்