ஜப்பான் மேல் பறந்த வட கொரிய ஏவுகணை

ஜப்பான் மேல் பறந்த வட கொரிய ஏவுகணை; மக்களுக்கு எச்சரிக்கை

by Bella Dalima 04-10-2022 | 4:13 PM

Japan: வட கொரியாவின் ஏவுகணை ஜப்பான் வான்பரப்பைக் கடந்து பசுபிக் பெருங்கடலில் வீழ்ந்துள்ளது. இதனால் தமது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், வடக்கு ஜப்பானில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

2017 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும். அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவப் பயிற்சிக்கு மத்தியில், 10 நாட்களில் வட கொரியாவின் ஏவுகணை வீசப்பட்டுள்ளது. 

ஏவுகணை வட கொரியாவின் சீனாவுடனான மத்திய எல்லைக்கு அருகிலுள்ள முப்யோங்- ரியில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 7:23 மணியளவில் ஏவப்பட்டதாக தென் கொரிய கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது பசுபிக் பெருங்கடலில் வீழ்வதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் அதிகபட்சமாக 1,000 கிலோமீட்டர் (621 மைல்) உயரத்தில் 20 நிமிடங்களுக்கு சுமார் 4,600 கிலோமீட்டர்கள் பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் பிரதமர் Fumio Kishida இந்த ஏவுகணை சோதனையை கடுமையாக கண்டித்துள்ளார்.  வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் மிக மோசமானவை என அவர் விமர்சித்துள்ளார். எனினும், ஜப்பான் அந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்த எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

இதனிடையே, ஜப்பான் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை செலுத்தும் வட கொரியாவின் "ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற" செயலை வன்மையாகக் கண்டிப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர்  அட்ரியன் வாட்சன் கூறியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை வட கொரியா அப்பட்டமாக புறக்கணிப்பதை அதன் செயற்பாடுகள் காட்டுவதாகவும் அட்ரியன் வாட்சன் குறிப்பிட்டுள்ளார். 

வட கொரியா இந்த ஆண்டில் இதுவரை 23 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.