எரிபொருள் விநியோகத்தில் தடை இல்லை - அமைச்சர் கஞ்சன

எரிபொருள் விநியோகத்தில் தடை இல்லை - அமைச்சர் கஞ்சன

by Staff Writer 04-10-2022 | 8:19 AM

Colombo (News 1st) ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருட்களை மாத்திரம் இன்று(04) விநியோகிக்கவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எவ்வித தடையும் ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்கள் அநாவசியமாக அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, இன்று(04) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் முற்பதிவு நடவடிக்கையில் இருந்து விலகவுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடியில் 45 வீதத்தை மீள அறவிடுவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் விநியோகஸ்தர்களுக்கு 2.5 வீத மாதாந்த கட்டணம் செலுத்தப்படுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாஒட்டுன்ன தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மாதாந்தம் செலுத்தப்பட்ட தள்ளுபடியில் 45 வீதத்தை நேற்று(03) முதல் மீள அறவிடுவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எரிபொருள் முற்பதிவு நடவடிக்கையில் இருந்து விலகுவதாக  கபில நாஒட்டுன்ன தெரிவித்துள்ளார்.