பொன்னியின் செல்வன்: தனிப்பெரும் இலக்கிய நாவல் இன்று திரைக்களம் கண்டது

by Bella Dalima 30-09-2022 | 7:02 PM

Colombo (News 1st) பொன்னியின் செல்வன்: இலட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து மெய்சிலிர்த்த தனிப்பெரும் இலக்கிய நாவல் இன்று திரைக்களம் கண்டுள்ளது. 

தமிழ் பேசும் மக்களின் சக்தியான சக்தி ​TV பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடப்பட்ட முதல் நாளான இன்றே, சோழர்களின் மீள் வருகையை தனது அபிமான நேயர்கள் திரையரங்கில் கண்டுகளிப்பதற்கான அரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. 

தமிழ் கூறும் நல்லுலகில் கல்கி என அறியப்படும் இரா.கிருஸ்ணமூர்த்தி இந்த இலக்கிய பொக்கிஷத்தை எழுத்துருவில் செதுக்கியுள்ளார். 

கடல் கடந்தும் கண்டம் கடந்தும் அகண்ட சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சோழர்களின் வரலாறு நீண்ட நெடிய முயற்சியின் பயனாக திரைக்காவியமாக்கப்பட்டுள்ளது.  

சக்தி TV ஏற்பாடு செய்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்பட விசேட காட்சியை காண்பதற்காக கொழும்பு வௌ்ளவத்தையிலுள்ள SAVOY திரையரங்கிற்கு கலைத்துறை விற்பன்னர்கள் பலரும் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் உயர் அதிகாரிகள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சக்தி, சிரச TV-இன் விளம்பரதாரர்கள் உள்ளிட்ட பலரும் சரித்திர நாவலை திரையில் காண்பதற்காய் வருகை தந்திருந்தனர்.

அத்துடன், பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்பில் சக்தி TV நிகழ்ச்சிகளில் வினவப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நேயர்களுக்கும் முதல் நாளே திரைப்படத்தைக் காண்பதற்கான அரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.