புனர்வாழ்வு பணியக சட்டமூலம் ஊடாக மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயற்சி: செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் ஊடாக மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயற்சி: செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் ஊடாக மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயற்சி: செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

29 Sep, 2022 | 8:44 pm

Colombo (News 1st) கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தினூடாக போராட்டக்கள செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு திட்டமிடப்படுவதாக சிவில், அரசியல் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இந்த சட்டமூலத்தினூடாக போராட்டக்கள செயற்பாட்டாளர்களை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி, நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்  என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கடந்த 23 ஆம் திகதி புனர்வாழ்வு பணியகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 

வழி தவறிய போராட்டக்காரர்கள், அடிப்படைவாதிகள்,  நாசகார செயலில்  ஈடுபடுவோர் அல்லது போதை மருந்துகளுக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு செயற்பாட்டை திறம்பட செய்வதற்காக இந்த பணியகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. 

பணியகத்தின் செயற்பாடுகள், நிர்வாகம், முகாமைத்துவம் என்பவற்றுக்கு சபையொன்றை ஸ்தாபிக்கப்பட்டு, பாதுகாப்புக் கல்வி , சுகாதாரம் , புனர்வாழ்வு உள்ளிட்ட துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள் அதற்கென நியமிக்கப்படவுள்ளனர். 

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர் அல்லது பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் அதில் உள்ளடக்கப்படவுள்ளனர். 

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய விமானப்படை, கடற்படை, இராணுவத்தின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புனர்வாழ்வு பணியக சட்டமூலம்  நாட்டை இராணுவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் அரசியலமைப்பிற்கு முரணான சட்டமூலம் என தீர்ப்பளிக்குமாறு கோரி  சட்டத்தரணி அமில எகொடமஹவத்த உயர் நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபரின்  பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு சொந்தமான நீதிமன்ற அதிகாரம், நீதிமன்ற உத்தரவின்றி குறித்த பணியகத்திடம் ஒப்படைக்கப்படுவதாகவும், சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது நீதிமன்ற அதிகாரத்தை சூறையாடுவதாக அமையும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழி தவறிய போராளிகளுக்கு புனர்வாழ்வு என முன்னுரையில் கூறப்பட்டாலும், குறிப்பிட்ட வரையறை எதுவும் உள்ளடக்கப்படாமையின் காரணமாக கடந்த கால தவறுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கூட புனர்வாழ்வு அளிக்கும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மக்களின் பேச்சு, கருத்துச் சுதந்திரம் , அமைதியான போராட்ட சுதந்திரம் ஆகியவற்றை முற்றிலும் நசுக்கும் வகையிலான இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலமே நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்