.webp)
Colombo (News 1st) ஊடகவியலாளர் சந்திப்பின் போது வௌியிடப்பட்ட கருத்தினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்புவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(29) உத்தரவிட்டுள்ளது.
சனத் நிஷாந்தவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் குற்றப்பத்திரத்தை தயார் செய்து நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ரத்னபிரிய குருசிங்க ஆகியோர் முன்னிலையில் இன்று(29) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் தெரிவித்த கருத்தினூடாக நீதிமன்றத்தையும் சட்டவாட்சியையும் மிக கடுமையாக அவமதித்துள்ளதாக தெரிவித்து சட்டத்தரணிகளான பிரியலால் சிறிசாந்த மற்றும் விஜித குமார ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.