வவுணதீவில் பொலிஸார் கொலை: 4 பிரதிவாதிகளுக்கு பிணை

வவுணதீவில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை: 4 பிரதிவாதிகளுக்கு பிணை

by Staff Writer 27-09-2022 | 3:50 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி N.M.M.அப்துல்லா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நான்கு பிரதிவாதிகளும் தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனை தவிர, பிரதிவாதிகளுக்கு வௌிநாடுகளுக்கு செல்ல தடையுத்தரவு பிறப்பித்த நீதிபதி, பிரதிவாதிகளின் கடவுச்சீட்டை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கடவுச்சீட்டு இல்லையெனின் அதற்கான சத்தியக்கடதாசியை சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.

அதனை தவிர பிரதிவாதிகளின் வதிவிடத்தை உறுதி செய்து, கிராம உத்தியோகத்தரிடம் பெறப்பட்ட சான்றுப்பத்திரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வவுணதீவில் இரண்டு பொலிஸார் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானின் சாரதியான கபூர் மாமா என்றழைக்கப்படும் சஹீர் ஆதம்லெப்பை உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கு எதிரான சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பிரதிவாதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.