ஜப்பானுடனான நட்புறவில் ஏற்பட்ட விரிசலுக்கு ஜனாதிபதி வருத்தம்

ஜப்பானுடனான நட்புறவில் ஏற்பட்ட விரிசலுக்கு ஜனாதிபதி வருத்தம்

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2022 | 7:27 pm

Colombo (News 1st) இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடலின் போது முதன்மை விடயங்களை பூர்த்தி செய்ய தமது அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜப்பான் வௌிவிவகார அமைச்சர்  Yoshimasa Hayashi, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியுள்ளார்.

டோக்கியோ நகரில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினூடாக ஜப்பானின் சில முதலீடுகள் இரத்து செய்யப்பட்டதால், இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நட்புறவில் ஏற்பட்ட விரிசலுக்கு தாம் கவலை அடைவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இரத்து செய்யப்பட்டுள்ள செயற்றிட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானுக்கு சென்றுள்ள ஜனாதிபதி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கிலும் இன்று பங்கேற்றுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ஜப்பானின் பிரதமர் மற்றும்  நிதி அமைச்சரையும் சந்திக்கவுள்ளார்.

ஜப்பான் விஜயத்தை நிறைவு செய்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக நாளை  பிலிப்பைன்ஸ் செல்லவுள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Bongbong Marcos மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
 
இதனிடையே, சிங்கப்பூருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை செயற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong-ஐ சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் முதலீடுகளை மேற்கொள்ள சிங்கப்பூர் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்