கோபால் பாக்லே - ரவூப் ஹக்கீம் சந்திப்பு

கோபால் பாக்லே - ரவூப் ஹக்கீம் சந்திப்பு; ஒலுவில் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

by Bella Dalima 27-09-2022 | 7:35 PM

Colombo (News 1st) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும்  இடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பில் நேற்று (26) இடம்பெற்றது.

இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சமகால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுகத்தின் தற்போதைய நிலைமை , அதனை அண்மித்த பகுதியில் உள்ள கிராமங்கள் கடலரிப்பிற்கு உள்ளாவது தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்  இந்திய உயர்ஸ்தானிகரிடம் கூறியுள்ளார். 

மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் இந்தியாவின் நிதியுதவி திட்டத்தின் கீழ், ஒலுவில் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரினால் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக ஊடப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.