அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து BASL அறிக்கை

அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்த அரச இரகசியங்கள் சட்டத்தில் அமைச்சருக்கு அதிகாரம் இல்லை - சட்டத்தரணிகள் சங்கம்

by Staff Writer 24-09-2022 | 5:27 PM

Colombo (News 1st) ஜனாதிபதியின் கையொப்பத்துடன் பல இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டு நேற்று (23) விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. 

அதற்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

பெரும்பாலான இடங்களை அதி உயர் பாதுாப்பு வலயங்களாக அறிவிப்பதற்கு அரச இரகசியங்கள் சட்டத்தில் அமைச்சருக்கு அதிகாரங்கள் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச இரகசியங்கள் சட்டத்தின் கீழ் பல பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் செயலாளர் இசுரு பாலப்பட்டபெந்தி ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளனர்.

1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க அரச இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆம் சரத்தின் கீழ் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ரணில் விக்ரமசிங்கவினால் கொழும்பின் பல பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளமை தொடர்பில் தமது சங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக குறித்த சங்கம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

ஜனாதிபதியின் இந்த உத்தரவின் மூலம் பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபரின் அனுமதியின்றி அவ்வாறான இடங்களில் கூட்டங்களை நடத்துவதற்கு மற்றும் பேரணிகளை முன்னெடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய அதிகாரியான பாதுகாப்பு செயலாளரினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தின் மூலம் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், அந்த வலயங்களில் வாகனங்களை நிறுத்துவதும் தடை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச இரகசியங்கள் சட்டத்தின் இரண்டாம் சரத்தின் பிரகாரம், ஏதேனும் ஒரு இடத்தை, கட்டடத்தை, கப்பலை அல்லது விமானத்தை தடை செய்யப்பட்ட இடமாக அறிவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு அதிகாரமுள்ளது.

எனினும், விசாலமான ஒரு பிரதேசத்தை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. வேறு நோக்கங்களுக்காக இரண்டாம் சரத்தின் கீழ் உத்தரவிட முடியாது எனவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அந்த உத்தரவை மீறும் நபர்களை தடுத்து வைக்க முடியும் என்பதனால், மக்களின் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடல் என்பவற்றை மீறும் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இது குறித்து இலங்கை மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குள்ள உரிமை முக்கியமானது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச இரகசியங்கள் சட்டத்தின் கீழ், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிக்கும் ஒழுங்குமுறை தொடர்பில் உன்னிப்பாக சிந்தித்து, மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.