அதி உயர் பாதுகாப்பு வலயங்களும் தடை செய்யப்பட்டுள்ள விடயங்களும்

அதி உயர் பாதுகாப்பு வலயங்களும் தடை செய்யப்பட்டுள்ள விடயங்களும்

அதி உயர் பாதுகாப்பு வலயங்களும் தடை செய்யப்பட்டுள்ள விடயங்களும்

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2022 | 8:01 pm

Colombo (News 1st) அரச இரகசிய சட்டத்தின் இரண்டாம் பிரிவில் ஜனாதிபதியினால் கொழும்பில் சில இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் எவை?

1 –  பாராளுமன்ற தொகுதி 

பொல்துவ முற்சந்தியில் இருந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம், கும்புக்கஹதுவ வீதி, ரஜமல்வத்த வீதி, பாராளுமன்ற மைதானத்தின் கிம்புலாவல சந்தி வரையான பகுதி, மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டடத் தொகுதி, பின்னியர சந்தி முதல் பெத்தகான சந்தி வரையான பகுதி, தியவன்னா நீர்த்தேக்கம்  உள்ளிட்ட பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடங்குகின்றன. 

2 – உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதி , மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதி, கொழும்பு நீதவான் நீதிமன்ற தொகுதி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் 

டாம் வீதி , அளுத்கடை வீதி, சாஞ்சி ஆராச்சிவத்த வீதி,பார்சல் சுற்றுவட்டம், புனித செபஸ்டியன் வீதி மற்றும் மிஹிந்து மாவத்தை வரையான பகுதி இதில் உள்ளடங்குகின்றது. 

3 – ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படை தலைமையகம் மற்றும் பொலிஸ் தலைமையகம் 

இந்த அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் சைத்திய வீதியில் இருந்து  பொலிஸ் தலைமையகம் வரையான பகுதி மற்றும் பேரவாவி, மோகன் வீதி, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, சாரணர் மாவத்தை, கடற்கரை பகுதி உள்ளிட்ட காலி முகத்திடல் வரையான பகுதி 

4 – அக்குறுகொட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம் 

பாதுகாப்பு அமைச்சு மாவத்தை , தியவன்ன பூங்கா மாவத்தை, பாடசாலை மாவத்தை , D.G.விஜேசிங்க மாவத்தை வரையான பகுதி அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ளடங்குகின்றது.

5 – விமானப்படை தலைமையகம் 

பேர வாவி, சித்தம்பலம்  A கார்டினார் வீதி , மோகன் வீதி, ஜஸ்டிஸ் அக்பர்  மாவத்தை வரையான பகுதிகளும் இதில் உள்ளடங்குகின்றன.

6 – பிரதமர்  செயலக அலுவலகம் 

பிளவர் வீதி, பிளவர் வீதியின் உட்பகுதி , 5 ஆவது ஒழுங்கை , 27 ஆவது ஒழுங்கை வரையான பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்குகின்றன.

7 – அலரி மாளிகை 

காலி வீதியின் ரொடுண்டா சந்தியில் இருந்து பெரஹர மாவத்தை அல்விஸ் சந்தியில் இருந்து தர்மபால மாவத்தை வரையான பகுதி, கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்தின் கடற்கரை பகுதி, லிபர்ட்டி சுற்றுவட்டம் , காலி வீதியின் ஒரு பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரையான பகுதி 

8 – பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்லம் 

பௌத்தாலோக மாவத்தை, தும்முல்லை சந்தி, ஶ்ரீசம்புத்தத்வ ஜயந்தி  மாவத்தை வரையான பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடங்குகின்றன. 

குறித்த பகுதிகளில் காணப்படும் தூதரகங்களுக்கு சொந்தமான இடங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் தடை செய்யப்பட்டுள்ள விடயங்கள் என்ன?

பொலிஸ்மா அதிபர்  அல்லது   மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தியோகபூர்வ கடிதம் இன்றி இந்த பகுதிகளில் பெரஹர, கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட விடயங்களை முன்னெடுக்க முடியாது என குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்த அரச இரகசியங்கள் சட்டத்தில் அமைச்சருக்கு அதிகாரம் இல்லை – சட்டத்தரணிகள் சங்கம்

அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்த அரச இரகசியங்கள் சட்டத்தில் அமைச்சருக்கு அதிகாரம் இல்லை – சட்டத்தரணிகள் சங்கம்

அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்த அரச இரகசியங்கள் சட்டத்தில் அமைச்சருக்கு அதிகாரம் இல்லை – சட்டத்தரணிகள் சங்கம்

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2022 | 5:27 pm

Colombo (News 1st) ஜனாதிபதியின் கையொப்பத்துடன் பல இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டு நேற்று (23) விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. 

அதற்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

பெரும்பாலான இடங்களை அதி உயர் பாதுாப்பு வலயங்களாக அறிவிப்பதற்கு அரச இரகசியங்கள் சட்டத்தில் அமைச்சருக்கு அதிகாரங்கள் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச இரகசியங்கள் சட்டத்தின் கீழ் பல பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் செயலாளர் இசுரு பாலப்பட்டபெந்தி ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளனர்.

1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க அரச இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆம் சரத்தின் கீழ் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ரணில் விக்ரமசிங்கவினால் கொழும்பின் பல பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளமை தொடர்பில் தமது சங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக குறித்த சங்கம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

ஜனாதிபதியின் இந்த உத்தரவின் மூலம் பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபரின் அனுமதியின்றி அவ்வாறான இடங்களில் கூட்டங்களை நடத்துவதற்கு மற்றும் பேரணிகளை முன்னெடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய அதிகாரியான பாதுகாப்பு செயலாளரினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தின் மூலம் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், அந்த வலயங்களில் வாகனங்களை நிறுத்துவதும் தடை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச இரகசியங்கள் சட்டத்தின் இரண்டாம் சரத்தின் பிரகாரம், ஏதேனும் ஒரு இடத்தை, கட்டடத்தை, கப்பலை அல்லது விமானத்தை தடை செய்யப்பட்ட இடமாக அறிவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு அதிகாரமுள்ளது.

எனினும், விசாலமான ஒரு பிரதேசத்தை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. வேறு நோக்கங்களுக்காக இரண்டாம் சரத்தின் கீழ் உத்தரவிட முடியாது எனவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அந்த உத்தரவை மீறும் நபர்களை தடுத்து வைக்க முடியும் என்பதனால், மக்களின் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடல் என்பவற்றை மீறும் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இது குறித்து இலங்கை மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குள்ள உரிமை முக்கியமானது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச இரகசியங்கள் சட்டத்தின் கீழ், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிக்கும் ஒழுங்குமுறை தொடர்பில் உன்னிப்பாக சிந்தித்து, மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்