.webp)
Colombo (News 1st) காடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வனவள பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் விவசாயம், நீர் வேளாண்மையினை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர தலைமையில் வன பாதுகாப்பு, வன ஜீவராசிகள் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், துறைசார் அமைச்சுகளின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் - முல்லைத்தீவு மாவட்டங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடலின் போது குறித்த திணைக்களங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகள், யுத்தத்திற்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய காணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு உரியவர்களிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு அமைய வன ஜீவராசிகள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த மன்னார் சுவாமித்தோட்டம் கிராமக் காணிகளை மீளளிப்பதற்கும் இந்த கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.