.webp)
Colombo (News 1st) முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீகக் காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்து நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த குறித்த இருவரும் நேற்று (21) கைது செய்யப்பட்டிருந்தனர்.
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட து.ரவிகரன் மற்றும் இரத்தினராசா மயூரன் ஆகிய இருவரும் இன்று முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, இருவரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் T.சரவணராஜா உத்தரவு பிறப்பித்தார்.
இதேவேளை, குருந்தூர் மலைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் தமிழர்களின் பூர்வீகக் காணி சுவீகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
முல்லைத்தீவு நகர சந்தியிலிருந்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் வரை ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களை காணொளி பதிவு செய்த இராணுவத்தினருடன் மக்கள் முரண்பட்டனர்.
தலைமையகத்தினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தாம் காணொளி பதிவினை மேற்கொண்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக இராமநாதன் வீதி ஊடாக பரமேஸ்வரா சந்தியை அடைந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர் .