English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
22 Sep, 2022 | 4:10 pm
இன்று உலக ரோஜா தினம்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் திகதி உலக ரோஜா தினம் நினைவுகூரப்படுகிறது. இந்நாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவரவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் புற்றுநோய்க்கு எதிரான போரில் அவர்கள் தனித்து விடப்படவில்லை என்பதை உணர்த்தவுமே இந்நாள் நினைவுகூரப்படுகிறது.
எனினும், இந்நாளின் பின்னணியில் உள்ள மெலிண்டா ரோஸ் பற்றி அறிந்திருப்பது அவசியம்.
வேகமாகச் சுழலும் உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் இலக்குகளை நோக்கி வேகமாக பயணிக்கின்றனர். சிலர் தங்களது சொந்த இலக்குகளை நோக்கியும், சிலர் தங்களின் இலக்குகளின் மூலம் மற்றவர்களுக்குப் பயன்தரும் வகையிலும் தங்களது பாதையை தேர்ந்தெடுக்கின்றனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் குறித்து இந்த சமூகத்தில் என்னவிதமான பார்வை இருக்கும் என நம்மில் பலருக்கும் தெரியும். ஒரு பரிதாபத்திற்குரியவராக பார்க்கப்படும் பலருக்கும் மத்தியில் தன்னை ஒரு தன்னம்பிக்கையின் வடிவமாக மாற்றிக் கொண்ட மெலிண்டா ரோஸ் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?
'பல நண்பர்களுக்கு உற்சாகமளிக்க நான் விரும்பினேன்' என கூறிய 12 வயதான, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிதான் மெலிண்டா ரோஸ்.
1982 ஆம் ஆண்டு பிறந்த மெலிண்டாவிற்கு 1994 பெப்ரவரியில் இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனது 12 வயதில் மீள முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவள் அவள்.
உரிய சிகிச்சைகள் இல்லாத அந்தக் காலத்தில் இரத்தப் புற்றுநோய் குறித்த பல்வேறு அச்சங்கள் நிலவி வந்தன. இரண்டு வாரம் மட்டும் உயிர் பிழைத்திருப்பார் என மருத்துவர்கள் கூற, அவர்களின் வார்த்தைகளை எல்லாம் பொய்யாக்கினாள் மெலிண்டா.
அவளுக்குப் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தபோது, அவள் தோள்பட்டை மற்றும் முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவளுக்கு மேற்கொள்ளப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை அவளின் ஆயுள் நீட்டிப்பிற்கு உதவியது.
தன்னைப்போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்க தனது தந்தை மற்றும் சகோதரரின் உதவியுடன் பிரத்தியேக இணையப் பக்கத்தை உருவாக்கி, அங்கு தனது புற்றுநோய்க் கால அனுபவங்களை பகிர்ந்துகொண்டாள்.
தன்னைப் போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கரங்களையும் மெலிண்டா பற்றினாள். அவர்களுக்கு நம்பிக்கையளித்தாள். இன்னும் சொல்லப்போனால் மெலிண்டா வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு மெலிண்டாவின் கடிதங்கள் ஆயுளை நீட்டிக்கும் உறுதிப்பாட்டு ஆவணங்களாகத் தெரிந்திருந்தது என்பதில் வியப்பேதுமில்லை.
புற்றுநோய் அச்சப்பட வேண்டிய ஒன்றல்ல. ஆனால் அதன் காரணமாக யாரும் புறக்கணிக்கப்படக்கூடாது என மெலிண்டா வலியுறுத்தினாள்.
மருத்துவமனையில் நான் இருந்த காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிறைய குழந்தைகளை சந்தித்தேன். அவர்களில் பெரும்பாலோர் மிகவும் அச்சத்துடன் இருந்தார்கள், அதனால் என்னால் முடிந்தபோது, அவர்களுடன் பேசினேன். அவர்களைக் குறைந்தபட்சம் இன்னும் கொஞ்சம் நம்பிக்கையுடனும் பாதுகாப்பாகவும் உணரவைக்க முயற்சித்தேன். ஒவ்வொரு முறையும் நான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும்போது புதிதாக கண்டறியப்பட்ட புற்றுநோய் குழந்தைகளைச் சந்திக்க முயலுகிறேன், அவர்கள் அனைவரும் எப்போதும் என் சிறப்பு வாய்ந்த நண்பர்களாகவே இருப்பார்கள்
என்ற அவளின் வார்த்தைகள் மனிதம் போதிக்கும் வரிகள்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக் கலக்கமுற்ற குழந்தைகளுக்கு ஆறுதலளிக்கும் இடமாக மெலிண்டா இருந்தாள்.
தான் ஒரு புற்றுநோயாளி என்பது தெரிந்தும் பிறரின் கவலைகளைக் களைய முனைந்தாள் மெலிண்டா. மெலிண்டா வாழ்ந்த மிகச் சிறிய வாழ்வில் இந்த உலகத்திற்கு கொடுத்த செய்தி ஒன்றுதான் “எந்தக் கவலையையும் நாம் அனுமதிக்காமல், அதனால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதே.”
தான் சந்திக்கச்சென்ற ஒவ்வொரு குழந்தைக்கும் மெலிண்டா ரோஜாக்களை பரிசளித்தாள். மருத்துவர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கி இரண்டரை ஆண்டுகள் வரை தன் ஆயுளை அவள் பெருக்கினாள். எனினும், இறுதியாக 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி, மெலிண்டாவிற்கு புற்றுநோய் பாதிப்பு அதிகமாகி தன் 15 வயதில் மறைந்தாள். அவளின் நம்பிக்கை வார்த்தையால் ஊக்கம் பெற்ற புற்றுநோயாளிகளின் மலர்களால் அவளின் கல்லறை நிரம்பி வழிந்தது.
அவளின் அந்த அன்புமிக்க அந்த நடவடிக்கையை நினைவுகூர இன்று உலகமே ரோஜாக்களைப் பரிமாறிக்கொள்கிறது!
01 Dec, 2023 | 05:51 PM
24 Nov, 2023 | 05:00 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS