.webp)
Colombo (News 1st) மக்கள் போராட்டத்தில் ஒலித்த பிரதான கோரிக்கையான சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான கருத்திற்கு மேலதிமாக தேசிய சபையொன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்க தரப்பின் யோசனை பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் பொறிமுறை தேசிய சபையில் இல்லையென தெரிவித்து சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இன்று நிறைவேற்றப்பட்ட தேசிய சபையின் தலைவராக சபாநாயகர் செயற்படுவதுடன் பிரதமர் , பாராளுமன்ற சபை முதல்வர் , எதிர்க்கட்சித் தலைவர், ஆளுங்கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் அங்கத்தவர்களாக செயற்படவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவு செய்த 35-க்கும் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய சபைக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
குறுகிய, நடுத்தர, நீண்ட கால தேசிய கொள்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்குரிய முன்னுரிமைகளை நிர்ணயித்தல், பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய , நடுத்தர பொது குறைந்தபட்ச வேலைத்திட்டம் தொடர்பில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்தல் , அமைச்சர்கள் விசேட தெரிவுக்குழுக்களின் தலைவர்கள், இளைஞர் அமைப்புகளை கண்காணிப்போரின் பங்குபற்றுதலுடன் விசேட கூட்டத்திற்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது தேசிய சபையின் பொறுப்பாகும்.
தற்போது அமுலிலுள்ள தெரிவுக்குழுக்களிடமிருந்து அறிக்கைகளை பெற்றுக்கொள்ளும் இயலுமையும் தேசிய சபையின் வசம் உள்ளது.