ரயில்கள் தடம்புரள்வதற்கான காரணம்?

மார்க்கங்கள் பராமரிக்கப்படாமையே ரயில்கள் தடம்புரள்வதற்கான காரணம் - ரயில்வே தொழிற்சங்கங்கள்

by Chandrasekaram Chandravadani 20-09-2022 | 7:53 AM

Colombo (News 1st) ரயில் மார்க்கங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாமையே கரையோர மார்க்கத்தில் ரயில்கள் தடம்புரளும் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான காரணம் என ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

இதற்கான சிறந்த தீர்வு கிடைக்காவிடின், எதிர்வரும் நாட்களில் பயணிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என லொக்கோமோட்டிவ் பொறியியலாளர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் K.A.U.கொந்தசிங்க குறிப்பிட்டார்.

கொழும்பு பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் நேற்று(19) ரயில் எஞ்சினொன்று தடம்புரண்டது.

காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயிலொன்று, கொள்ளுப்பிட்டியில் கடந்த வாரம் தடம்புரண்டது.

அதன் காரணமாக பல ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரத்னவிடம் வினவிய போது, மார்க்கங்களை பராமரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களுக்கான பற்றாக்குறை காரணமாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுவதாக கூறினார்.

டொலர் நெருக்கடி காரணமாக மூலப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிக்கல் காணப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.