பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்குகள் இன்று

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் இன்று(19)

by Staff Writer 19-09-2022 | 2:24 PM

Colombo (News 1st) சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரியணையை நீண்ட காலம் அலங்கரித்த இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிப் பயணம் இன்று(19). 

பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள அபேயில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. 

1952ஆம் ஆண்டு பிரித்தானியா மற்றும் பொதுநலவாய நாடுகளின் தலைவியாக திகழ்ந்த இரண்டாவது எலிசபெத் மகாராணி உயிரிழந்ததை அடுத்து, 70 வருடங்கள் 214 நாட்கள் அவர் பொறுப்புடன் வகித்த தலைமைப் பதவி கடந்த 8ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அன்று முதல் இன்று வரை மகாராணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு சடங்குகள் நடத்தப்பட்டன.

வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் வைக்கப்பட்டுள்ள மகாராணியின் பூதவுடலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட  உலக தலைவர்கள் பலரும் இறுதி அஞ்லி செலுத்தினர்.

மகாராணியின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயம் வரையிலான இறுதி ஊர்வலமானது பிரித்தானிய நேரப்படி காலை 10.35 மணிக்கு ஆரம்பமாகியது. 

காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள அபே தேவாலயத்தில் தேவ ஆராதனைகள் இடம்பெற்றன. 

இதன்போது மகாராணியை நினைவுகூர்ந்து ஐக்கிய இராச்சியம் முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.