சாகித்திய இரத்தினா விருது பெற்ற பன்முகத் திறமையாளர் K.S.சிவகுமாரன் காலமானார்

by Bella Dalima 16-09-2022 | 5:54 PM

Colombo (News 1st) சாகித்திய இரத்தினா விருது பெற்ற, வாழ்நாள் சாதனையாளரும் பன்முகக் திறமையாளருமான K.S.சிவகுமாரன் தனது 86 ஆவது வயதில் கொழும்பில் நேற்று காலமானார்.

மட்டக்களப்பினை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் K.S.சிவகுமாரன் பத்தி எழுத்து, விமர்சனம், அறிவியல், மொழிபெயர்ப்பு, கலை - இலக்கியத் திறனாய்வு, வானொலி ஒலிபரப்பு உள்ளிட்ட துறைகளில் பன்முகத் திறமையாளராக திகழ்ந்தவராவார்.

அன்னாரது படைப்பில் 30 தமிழ் நூல்களும், 2 ஆங்கில நூல்களும் 2 ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியங்களும் வௌியாகியுள்ளதாக கொழும்பு தமிழ் சங்கம் வௌியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓமான், மாலைத்தீவு,  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயர்நிலை பாடசாலைகளில் ஆசிரியராகவும் அமரர் K.S.சிவகுமாரன் பணியாற்றியுள்ளார். பல பட்டங்களைப் பெற்ற அமரர் K.S.சிவகுமாரனுக்கு ஆறாவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரது மறைவிற்கு கொழும்பு தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்கூறும் நல்லுலகத்தின் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.