.webp)
Colombo (News 1st) உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட குழாத்தை சகலதுறை வீரர் தசுன் ஷானக்க வழிநடத்தவுள்ளார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பிரகாசித்த பானுக்க ராஜபக்ஸ, குசல் மென்டிஸ், பெத்தும் நிஸங்க, தனுஸ்க குணதிலக்க ஆகியோரும் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
தசுன் ஷானக்கவுடன் வனிந்து ஹசரங்க, தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரத்ன ஆகியோர் குழாத்தில் இடம்பெற்றுள்ள பிரதான சகலதுறை வீரர்களாவர்.
மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, சரித் அசலங்க ஆகியோருக்கும் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உபாதை காரணமாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை தவறவிட்ட வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோரும் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
உடற்கூற்று தகுதியின் பின்னர் துஷ்மந்த சமீரவும் லஹிரு குமாரவும் அணிக்கு திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டில்ஷான் மதுஷங்க , ப்ரமோத் மதுஷான் ஆகியோர் குழாத்தில் இடம்பெற்றுள்ள பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாவர்.
முன்னாள் அணித்தலைவர் தினேஸ் சந்திமால், அஷேன் பண்டார, பிரவீன் ஜயவிக்ரம, பினுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் மேலதிக வீரர்களாக குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தகுதிச்சுற்றில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி தனது முதல் போட்டியில் நமீபியாவை எதிர்த்தாடவுள்ளது.
இந்த போட்டி அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.