உணவு பாதுகாப்பின்மை: அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 6.3 மில்லியன் பேர்

by Bella Dalima 15-09-2022 | 8:03 PM

Colombo (News 1st) நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உணவு பாதுகாப்பற்ற தன்மை, வீட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் வறுமையில் வாடும் மக்கள், நாளாந்த சம்பளம் பெறுவோர் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கவனம் செலுத்தியுள்ளது. 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய வரைபு பிரேரணையிலும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பிலான விடயம் உள்ளடங்கியுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, மெசிடோனியா, மலாவி உள்ளிட்ட நாடுகளின் இணை அனுசரணையில் இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.

'இலங்கையின் பொருளாதார நெருக்கடி பெண்களில் எவ்வாறு தாக்கம் செலுத்தும், இந்த நாட்டில் ஏதோ தவறு நடக்கிறது என்பது செல்வந்தர்களுக்காவது தெரியுமா?' என்ற தலைப்பில் The New Humanitarian செய்தி வௌியிட்டுள்ளது. 

இலங்கை சனத்தொகையில் 30 வீதமானவர்கள் - 6.3 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்மை அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. 

பொருளாதார நெருக்கடி அனைவரையும் பாதித்துள்ள நிலையில், ஒதுக்கப்பட்டுள்ள சமூகங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் வேலை செய்யும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் The New Humanitarian செய்தி வெளியிட்டுள்ளது. 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின்  சம்பளம் குறைவாக உள்ள நிலையில், தொழிற்சாலைகளும் குறைந்த கால அளவிலேயே இயங்குவதால், தோட்டத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகThe New Humanitarian குறிப்பிட்டுள்ளது. 

பொருளாதார நெருக்கடி, உணவு பாதுகாப்பின்மையினால் தோட்டங்களில் பணியாற்றும் பெண்கள் அதிகளவிலான போஷாக்கு குறைபாட்டை எதிர்நோக்கியுள்ளனர். 

தற்போதைய நிலையில் போசாக்கான உணவு வகைகளை பெற்றுக்கொள்வதில் சவால் ஏற்பட்டுள்ளதாக பெருந்தோட்டப் பெண்கள் தெரிவித்துள்ளனர். 

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் இறுதியாக ஜுலை மாதம்  பதிவேற்றம் செய்துள்ள  தரவுகளுக்கு அமைய, நுவரெலியா மாவட்டத்தில் சராசரியாக ஒருவர் அடிப்படை தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்து வாழ்வதற்கு 13,816 ரூபா தேவைப்படுகிறது.

இதற்கமைய, நான்கு பேர் கொண்ட குடும்பமொன்று வறுமையின்றி அன்றாட தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்துகொள்வதற்கு அண்ணளவாக 55,264 ரூபா தேவைப்படுகிறது.

அன்றாட வேலைக்கு செல்லும் பெண்களும் வீட்டு வேலை செய்யும் பெண்களும் பெருந்தோட்டப் பெண்களும் போசாக்கு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி குறிப்பிட்டார். 

ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் காலை உணவு எடுத்துக்கொள்வதில்லை என சுட்டிக்காட்டிய கருப்பையா மைதிலி, வருமானத்தை விட அவர்களுக்கு செலவுகள் அதிகம் என தெரிவித்தார். 

தோட்ட கம்பெனிகள் உணவு மானியங்களை வழங்கி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் சங்கரன் விஜேச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.