.webp)
Colombo (News 1st) உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்துறைகள் ஒன்றிணைந்த கட்டமைப்பொன்றை உருவாக்கியுள்ளார்.
2025 ஆம் ஆண்டளவில் உணவுத் தேவையை உள்நாட்டில் நிறைவேற்றுவதற்காக, உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தி கிராமிய பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில், பல்துறைகள் ஒன்றிணைந்த கட்டமைப்பு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
எந்தவொரு நெருக்கடி சூழ்நிலையிலும், மக்களுக்கு சுகாதாரமான உணவை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான சமூக பொருளாதார சூழலை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
எந்தவொரு பிரஜையும் உணவின்றி பட்டினியில் இருக்கக்கூடாது , போசாக்கின்மையை எதிர்கொள்ளக்கூடாது என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஏழு குழுக்கள் மூலம் இந்த கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், ஜனாதிபதியின் தலைமையில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு சபை செயற்படவுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பிலான தேசிய ஒன்றிணைந்த கட்டமைப்பு ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
உணவு பாதுகாப்பு ,தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவராக பிரதமரின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் மாகாண ஒன்றிணைந்த கட்டமைப்பு, மாகாண ஆளுநர்களின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பவுள்ளதுடன், மாவட்ட செயலாளர்களின் தலைமையில் உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பிலான மாவட்ட ஒன்றிணைந்த கட்டமைப்பு இயங்கவுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பிலான பிரதேச கட்டமைப்பு பிரதேச செயலாளர்களின் தலைமையில் செயற்படவுள்ளது.
14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் , விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர், அருகிலுள்ள பாடசாலை அதிபர், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் இருவர் அங்கம் வகிக்கும் பொருளாதார புனர்வாழ்வு மற்றும் உணவு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
இதன் மூலம் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, வறுமையை நீக்கி சிறுவர்களை போசாக்கின்மையிலிருந்து விடுவித்து உணவு பாதுகாப்பு வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.