.webp)
Colombo (News 1st) பலத்த மழையினால் லக்ஷபான மற்றும் கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த களனி கங்கையை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 50 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்மித்த கடற்பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை தணிந்து வருவதால், இன்று நண்பகல் 12 மணி முதல் குறித்த கடற்கரைகளை அண்மித்த பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட முடியும் என கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, அனைத்து கடற்றொழிலாளர்களையும் தொழிலுக்கு செல்லுமாறு கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.