சீன அரசாங்கத்தினால் கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

by Bella Dalima 06-09-2022 | 5:52 PM

Colombo (News 1st) சீன அரசாங்கத்தினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. 

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 

பல்கலைக்கழகத்தின்  சுகாதார பாதுகாப்பு அறிவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கைக்கான சீன தூதுவர்  Qi Zhenhong கலந்து கொண்டிருந்தார். 

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக சமூகத்தினரும் கல்வியலாளர்களும் சீன தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாணவர்களுக்கு முதற்கட்டமாக மாதாந்தம் 4000/= வீதம் 7 மாதங்களுக்கான அன்பளிப்பு தொகையான 4.3 மில்லியன் ரூபா நிதி சீன தூதுவரினால் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கணகசிங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது

இலங்கைக்கான சீனத் தூதுவர்  Qi Zhenhong கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை நேற்று (05)  சந்தித்திருந்தார்.

இந்த விஜயத்தின் போது, கிழக்கு மாகாணத்திற்கும் சீன தூதருக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று  கைச்சாதிடப்பட்டுள்ளது.

இதன்போது, 20 பாடசாலைகளுக்கு தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் பலகைகள், உலர் உணவுகள் மற்றும் மருந்துகள் சீன தூதுவரால் அன்பளிப்பு செய்யப்பட்டன.