கால்வாய்க்குள் சிக்கி 14 வயது மாணவன் பலி

by Staff Writer 05-09-2022 | 7:34 PM

Colombo (News 1st) தொடரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடும் மழையையும் பொருட்படுத்தாது அதிகளவிலானவர்கள் இன்று(05) பகல் குருணாகல் நகரில் மாணவன் ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக அதீத பிரயத்தனம் மேற்கொண்டனர்.

மதகிற்குள் தவறி விழுந்து கழிவு நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை கண்டுபிடித்தாலும் மாணவனின் உயிரை அவர்களால் பாதுகாக்க முடியாமற்போனது.

வழமைபோன்று பாடசாலை முடிந்து வீடுகளுக்கு திரும்பும் மாணவர்களால் குருணாகல் நகரம் நிரம்பியது.

கடும் மழைக்கு மத்தியிலும் வீடு செல்வதற்காக சஜித குணரத்ன என்ற இந்த மாணவனும் குருணாகல் நகருக்கு வந்தார்.

நீரில் மூழ்கியிருந்த கந்த உடவத்த வீதியில் சென்றுகொண்டிருந்த சஜித திடீரென வீதியோரம் ஒதுங்கினார்.

வாகனமொன்றுக்கு இடமளிப்பதற்காக சஜித வீதியோரத்திற்கு சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

சஜித மீட்கப்பட்டவுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவரின் உயிரை பாதுகாக்க முடியாமற்போனது.

இன்று துரதிர்ஷ்டவசமான முறையில் இவ்வுலகிற்கு விடைகொடுத்த சஜித குணரத்ன குருணாகல் மலியதேவ கல்லூரியின் தரம் ஒன்பதில் கல்வி கற்றார்.

இவர் வெஹர பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் கடைசி பிள்ளையாவார்.