இலங்கை மீது பிரிட்டன் பிரதமர் வேட்பாளர் கரிசனை

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் கரிசனை கொள்வதாக பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் Liz Truss தெரிவிப்பு

by Bella Dalima 02-09-2022 | 5:16 PM

Colombo (News 1st) பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளர்கள் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். 

இலங்கையில் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தமது கரிசனையினை கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரான Liz Truss வௌிப்படுத்தியுள்ளார்.  

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக, பிரித்தானியாவின் பிரதமர் வேட்பாளரும் தற்போதைய வெளிவிவகார செயலாளருமான Liz Truss, பிரித்தானியாவில் வாழும் இலங்கை வம்சாவளி தமிழ்  மக்களுடன் கலந்துரையாடி இலங்கையில் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான தனது கரிசனையை ளெியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.  

மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் உறுதியாக முன்நிற்பதாக Liz Truss தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பிரித்தானிய தமிழ் கன்சர்வேட்டிவ் அமைப்பினருக்கும் பிரதமர் வேட்பாளர் Liz Truss-இற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக பங்கேற்றிருந்தார். 

வௌிவிவகார அலுவலர்களுக்கான செயலாளர் தெரிவின் போது, இலங்கையின் நல்லிணக்கம், நீதி , பொறுப்புக்கூறலுக்கான தனது கரிசனைகள் தொடர்பில் கருத்திற்கொள்ளவுள்ளதாக Liz Truss உறுதியளித்ததாக சுரேந்திரன் குருசுவாமி நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். 

இதேவேளை, ​2009 ஆம் ஆண்டு  உள்நாட்டு யுத்தத்தின் போதான வலிகள், தாக்கங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் கன்சர்வேட்டிவ் கட்சியின் மற்றுமொரு பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் அண்மையில் கலந்துரையாடியிருந்தார். 

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திலும்  இறுதி யுத்தத்தின் போதும் தமிழர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கும், அவை குறித்த பொறுப்புக்கூறல் தொடர்பிலும் ரிஷி  சுனக் கவனம் செலுத்தியிருந்தார். 

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்திற்கான இறுதி வாக்கெடுப்பு நேற்று ஆரம்பித்து, இன்று 2 ஆம் திகதி  நிறைவடையவுள்ளது.

வாக்கு முடிவுகள் செப்டம்பர் 5 ஆம் திகதி அறிவிக்கப்பட்டு, கட்சியின் புதிய தலைவரும் பிரதமரும் நியமிக்கப்படவுள்ளனர்.

இரண்டு  வேட்பாளர்களும் புகலிடக்கோரிக்கை தொடர்பிலான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.