2.9 பில்லியன் டொலர் கடன் வசதியை பெற சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட இணக்கப்பாடு

by Bella Dalima 01-09-2022 | 8:23 PM

Colombo (News 1st) நான்கு வருட காலப்பகுதிக்காக  2.9 பில்லியன் அமெரிக்க டொலர்  விரிவான கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்காக   சர்வதேச நாணய நிதியம் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

இது தொடர்பில்  உத்தியோகபூர்வமாக விளக்கமளிப்பதற்காக சர்வதேச நாணய  நிதியத்தின் அதிகாரிகள்  கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். 

உத்தேச பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, உரிய மக்கள் ஆணையுடைய  அரசாங்கம் தேவை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர்  Peter Breuer இதன்போது கூறினார். 

Peter Breuer மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழு தலைவர்  Masahiro Nozaki ஆகியோர்   கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். 

சர்வதேச நாணய  நிதியத்தின் பிரதிநிதிகள் கடந்த  24 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்திருந்ததுடன், இன்றுடன் அவர்களின் விஜயம் நிறைவிற்கு வந்தது. 

இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் Masahiro Nozaki, முழுமையான கடன் தொகை நான்கு வருடங்களில் தவணை முறையில் வழங்கி முடிக்கப்படும் என குறிப்பிட்டார். 

சர்வதேச நாணய  நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவின் அனுமதியைப் பெற்று  முதலாவது  தவணை  நிதி வழங்கப்படும். ஒவ்வொரு  தவணையின் பின்னரும் அடுத்த தவணைக்கு முன்னதாக நிறைவேற்றுக்குழுன் மீளாய்வுக்கு பின்னரே நிதி விடுவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். 

இவ்வாறு கடன் வழங்கி உதவி செய்யாவிடின், இலங்கையின் நிலை மோசமடையும் என சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் Peter Breuer குறிப்பிட்டார். 

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து கடன்  வழங்குநர்களும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவான கடன் வசதியை வழங்குவதற்காக எதிர்ப்பார்க்கும் 7 முக்கிய நோக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலகில் குறைந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ள இலங்கையின் நிதி வருவாயை அதிகரிப்பது பிரதான இலக்காகும். 

அதன்கீழ் பிரதான  வரி சீர்திருத்தங்களை மேற்கொள்தல்,  தனியார் வருமான வரியை முற்போக்கானதாக மாற்றுதல், நிறுவன வருமான வரி மற்றும்  VAT தளத்தை விரிவுபடுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

2024 ஆம் ஆண்டாகும் போது,  சராசரி தேசிய உற்பத்தியில் 2.3 வீத கையிருப்பை எட்டுவற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து  எழும் நிதி அபாயங்களைக் குறைக்கும் பொருட்டு,  எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான செலவை ஈடு செய்யும் வகையிலான விலைகளை அறிமுகப்படுத்துவதையும் சர்வதேச நாணய நிதியம் எதிர்ப்பார்க்கின்றது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வருமானத்தை அதிகரிப்பதற்கான  நடவடிக்கைகள், எரிசக்தி தொடர்பிலான விலைத் திருத்தங்களை வரவேற்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

செலவீனங்கள் அதிகரித்துள்ளமையால்,  ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் செலவீனங்கள் மீதான அதிகரிப்பைக் குறைப்பது, சமூக பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்துவது என்பன சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு இலக்காகும். 

தரவு அடிப்படையிலான நாணய கொள்கை செயற்பாடுகள்  மூலம் நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், நெகிழ்வான பணவீக்க இலக்கை அடைவதற்காகவும் மத்திய வங்கியின் நிதி சுயாதீனத்தை வலுப்படுத்த புதிய மத்திய வங்கிச் சட்டம் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த செயற்பாடுகள் மூலம்  விரிவான கொள்கைக் கட்டமைப்பின் ஊடாக அந்நிய செலாவணியில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிப்பதன் மூலம் வெளிநாட்டு இருப்புக்களை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

வங்கி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு, நிதித்துறையின் பாதுகாப்பை விரிவுபடுத்துவதன் மூலம் வெற்றிகரமான மற்றும் சிறந்த வங்கி முறைமையை உருவாக்கி நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்த  வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப ஆதரவை பெற்று, இலஞ்ச ஊழலுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்கி, அதனூடாக நிதி வௌிப்படைத்தன்மை மற்றும் நிதி முகாமைத்துவத்தை மேம்படுத்தி,  ஊழலை  குறைப்பது சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு  இலக்காகும். 

இதனிடையே, விரிவான கடன் திட்டத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று முற்பகல் சந்தித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடன் சுமையில் இருந்து நாட்டை மீட்டெடுத்தல், மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் மோசமடையாத விதத்தில் நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து நிலைமையில் இருந்து மீள்வது மாத்திரம் அல்லாமல்,  பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் மோசமடையாத வகையில் பாதுகாப்பது முக்கியமானது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

போட்டிமிகு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

''நான் பிறக்கும் போது இலங்கையில் கடன் இருக்கவில்லை.  எமக்கு போதுமானளவு கையிருப்பு இருந்தது.  யுத்தத்தினால் மீண்டெழும் ஐக்கிய இராச்சியத்திற்கும் உதவி புரியும் அளவிற்கு கையிருப்பு இருந்தது. தேயிலை, இறப்பர் மூலம் நாம் போதுமானளவு பணம் திரட்டிக்கொண்டோம்.  D.S.சேனாநாயக்க அரசாங்கத்தின் கீழ் நாம் எமது நீர்த்தேக்கங்களை அமைத்தோம்.  அவர் ஒரு கொள்கையையே நம்பினார்.  தனிநபர்களும் தேசியமும் கடன் சுமையில் இருந்து விடுபட வேண்டும் என்பதே அவரின் கொள்கையாக இருந்தது.  அவர் இந்த நாட்டின் பிரதான பௌத்த நிக்காயவின் தலைவராக செயற்பட்டார்.  எனவே தர்ம போதனைக்கு அமைய எவருக்கும் கடன்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்தார்.  நாம் அரசியலமைப்பின் 9 ஆம் சரத்திற்கமைய செயற்படுவதாக இருந்தால், அதற்கமைய பயணிக்க வேண்டும்''

என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். 

இதேவேளை, பொருளாதார மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு, உரிய மக்கள் ஆணையுள்ள அரசாங்கம் தேவை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுத் தலைவர் Peter Breuer இன்று தெரிவித்தார்.

இதனிடையே, சர்வதேச நாணய நிதியத்தின்  உடன்பாடு தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன  தௌிவுபடுத்தினார். 

அதிகாரிகள்  மட்டத்தில்  இணக்கப்பாட்டிற்கு வந்ததன் பின்னர் இலங்கைக்கான  கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டின் போது, ​​எமது கடன் நிலைபேண் தன்மையை (Dead Sustainability) பெற்றுக் கொள்வற்கு இலங்கைக்கு கடன் வழங்குநரின் சான்றிதழ் அவசியமானது எனவும்  அதன் பின்னர்  சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையின் (Executive Board)அனுமதியைப் பெற்றுக்கொள்வது அவசியமானது எனவும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். 

அத்தியாவசிய செயற்பாடாக நிதியை பெற்றுக்கொள்வதன் ஊடாக பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் படிப்படியாக வழமைக்கு கொண்டு  வர வேண்டும் என பிரதமர் தெரிவித்தார். 

இதேவேளை, கடன் வழங்கியுள்ள தரப்புகளுடன் இணக்கப்பாட்டிற்கு வருவது, சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் பெற்றுக்கொள்வதற்குள்ள பிரதான விடயம் என அரச நிதி தெரிவுக்குழுவின் தலைவர், கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 

கடன் வழங்கிய தரப்பினருடன் இலங்கை இணக்கப்பாட்டிற்கு வந்தால், சர்வதேச நாணய நிதியம் இன்று இணங்கிய தொகையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அடுத்த கட்டமாக கடன் வழங்குநர்களுடனும் கலந்துரையாட வேண்டும் எனவும்  ஹர்ஷ டி சில்வா  கூறினார். 

அதன் பின்னர் இந்தியா, பல்தேசிய நிறுவனங்கள், உலக வங்கி,  ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற வங்கிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதுடன், சர்வதேச இறையாண்மை முறிகள் நிறுவனத்துடனும் கலந்துரையாட வேண்டிய தேவை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, IMF உடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்வதில் மத்திய வங்கியின் ஆளுநர் விசேட பொறுப்பை நிறைவேற்றியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக IMF உடன் ஊழியர் மட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்ததாக ஹேஷா விதானகே கூறினார்.