பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை

வளிமண்டலத்தில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையில் மாற்றம்; பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை

by Bella Dalima 01-09-2022 | 7:35 PM

Colombo (News 1st) நாட்டை அண்மித்து  வளிமண்டலத்தில்  ஏற்பட்ட குழப்ப நிலை படிப்படியாக நீங்கிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் என்பதால், ஆபத்துகளை குறைத்துக்கொள்வதற்காக பொதுமக்கள்அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடும் மழையுடன் கூடிய வானிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

மத்திய மலைநாட்டின் நீரேந்து பகுதிகளில்  நேற்று (31) இரவு முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக,  இன்று அதிகாலை முதல் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நோர்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், லக்ஷபான நீர்த்தேக்கத்தில் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.

மண்சரிவு அபாயம் உள்ள   ஹட்டன் -நுவரெலியா, கம்பளை பிரதான வீதிகளில் போக்குவரத்தை மேற்கொள்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இரத்தினபுரி மாவட்டத்தில் களுகங்கை பெருக்கெடுத்தமையால், கிரி எல்ல - மடபத்திரை பிரதான வீதியும், அதனை அண்மித்த தாழ்நில பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால்  இந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 
 
திருகோணமலை - தோப்பூர் பிரதேசத்தில் உள்ள கட்டைபறிச்சான் வடிச்சல் ஆறு தடைப்பட்டிருப்பதனால் அங்குள்ள வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்கு 5000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ். மாவட்டத்தில் 20.8 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகிய நிலையில், யாழ்ப்பாணத்தின் சில தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதாக  யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி -  ரங்கல பேனசைட் தோட்டத்தின் தொழிலாளர்  குடியிருப்புகள் நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக சேதமடைந்துள்ளன.

குடியிருப்புகளில் வசித்த மக்கள் சமையலறைகளிலும் அயல் வீடுகளிலும் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.