உணவு பாதுகாப்பற்ற நிலை - உலக உணவு திட்டம்

இலங்கையில் உணவு பாதுகாப்பற்ற நிலை - உலக உணவு திட்டம்

by Staff Writer 01-09-2022 | 2:12 PM

Colombo (News 1st) இலங்கையில் 10 பேரில் மூவர், உணவு பாதுகாப்பற்ற நிலையிலுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நடுத்தர வருமான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் 05 வயதுக்குட்பட்ட சிறார்களின் போசாக்கின்மை அளவு அதிகமாக இருப்பதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வயதில் உள்ள குழந்தைகளில் 17 வீதமானோர் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டுகின்றது.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் பிரகாரம், இது மிகவும் மோசமான நிலைமை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுமார் 1.5 மில்லியன் பேருக்கு அவசர உணவு உதவி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தால் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பிற்கமைய, நாட்டில் சுமார் 6.3 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்றியும் உதவிகளை எதிர்பார்த்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.