.webp)
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் அமைதி வழி போராட்டக்காரர்களை ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமாவுடன் ஜூலை 21 ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர், இலங்கை மக்கள் ஒன்றுகூடுவதற்கும் கருத்துகளை வெளியிடுவதற்கும் உள்ள உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஒரு மாத காலமாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, போராட்டக்காரர்களை வன்முறையால் ஒடுக்கி, கைது செய்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி தொடர்ந்து மீறப்பட்டு வருவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.