பல பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

by Bella Dalima 31-08-2022 | 4:03 PM

Colombo (News 1st) அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபாத்த பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நிலப்பகுதிகளில் வௌ்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதையடுத்து இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அந்த பகுதிகள் ஊடாக பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு, கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களின் பல இடங்களில் இன்று 150 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டுப் பகுதியிலும் ஆறுகளுக்கு அண்மித்து வசிப்போர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து வீழும் அபாயமுள்ளதால், அது குறித்தும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.