பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க முன்வர வேண்டும்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

by Staff Writer 30-08-2022 | 5:59 PM

Colombo (News 1st) கடந்தகால தவறுகளை உணர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை உளப்பூர்வமாக நீக்க தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடுமையை இன்றளவிலும் தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்ற நிலையில், அந்த சட்டம் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் நாட்டின் இதர பகுதியினரையும் விட்டுவைக்கவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை இப்பொழுது நடைமுறைப்படுத்துவது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும், உலக நாடுகளிடமிருந்து இலங்கை தனிமைப்பட்டு விடும் என்றும் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் கூறியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நாட்டை முன்னேற்ற விரும்பினால், கடந்தகால தவறுகளை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, அதனை நிவர்த்தி செய்ய இலங்கை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தின் மீதும் மனித உரிமைகள் மீதும் அக்கறை கொண்டவர்களும், அமைதி, சமாதானத்தை விரும்பக்கூடிய எவரும் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான சட்டத்தை ஏற்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஊழல் மலிந்த அரசுகளை காப்பாற்றிக்கொள்வதற்காக இவ்வாறான சட்டங்கள் எந்த வடிவத்தில்  முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட வேண்டும் என  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.