அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

by Bella Dalima 30-08-2022 | 4:31 PM

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டனர். 

சுகாதார அமைச்சிற்கு முன்பாக மாணவர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். 

மருதானை டெக்னிக்கல் சந்தி வரை ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டுவதற்கு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கலகத்தடுப்பு பிரிவினரும் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மாணவர்களின் எதிர்ப்பு பேரணி இன்று பிற்பகல் மருதானையிலிருந்து ஆரம்பமானது. 

ஒடுக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகள் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், தற்போது அநீதியான முறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட தரப்பினரை விடுவிக்க வேண்டுமெனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.