மின்வெட்டு நேரத்தை குறைப்பது குறித்து ஆராய்வு

மின்வெட்டு நேரத்தை குறைப்பது குறித்து ஆராய்வு

by Staff Writer 27-08-2022 | 4:04 PM

Colombo (News 1st) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழந்த முதலாவது மின்பிறப்பாக்கி திருத்தப்பட்டு மீண்டும் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, நுரைச்சோலை மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இரண்டாவது மின்பிறப்பாக்கியின் திருத்தப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

தற்போது நாளாந்த மின் உற்பத்தியில் 50 வீதம் நீர் மின் உற்பத்தியின் மூலமே முன்னெடுக்கப்படுகின்றது.

இதனிடையே, நுரைச்சோலையில் செயலிழந்த முதலாவது மின்பிறப்பாக்கி மீண்டும் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதால் நாளாந்த மின்வெட்டு நேரத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிவிக்குமாறு மின்சார சபை பொது முகாமையாளருக்கு, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்றும் (27) நாளையும் (28) மூன்று மணித்தியாலங்களுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.