தமிழர் பிரச்சினை குறித்து சாணக்கியன் கலந்துரையாடல்

தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய சாணக்கியன்

by Bella Dalima 27-08-2022 | 7:12 PM

Colombo (News 1st) தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய அமைப்பின் 65 ஆவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கனடாவில் நடைபெற்றது.

500-இற்கும் அதிகமான பல்வேறு நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தனர்.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கலந்துகொண்டிருந்தார்.

உலக நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டார். 

பொதுநலவாய அமைப்பின் 65-ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான காமினி லொக்குகே, C.B. ரத்னாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி கவிரத்ன, இரா.சாணக்கியன் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கனடாவில் பல பிரபல வர்த்தர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதில் இலங்கைக்கான உயர்தானிகரும் கலந்து கொண்டிருந்தார்.