இலங்கையில் மூன்றில் ஒரு குழந்தைக்கு அவசர உதவி தேவைப்படுகிறது: UNICEF தெரிவிப்பு

by Bella Dalima 27-08-2022 | 7:37 PM

Colombo (News 1st) இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் பேசப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையில் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏதேனுமொரு வகையில் அவசர உதவி தேவைப்படுவதாக  UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் George Laryea-Adjei பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளார். 

''இந்த நாட்டில் 6 மில்லியனுக்கும் அதிக சிறுவர்கள் உள்ளனர். அவர்களுள் 4.8 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை செல்லும் வயதுடையவர்கள். இலங்கையானது மனிதவள அபிவிருத்தியில், குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வியில்  சிறந்து விளங்குகின்றது. இதுவே இலங்கையின் பலமாகும். இது பல ஆண்டு கால முதலீடு என்பதுடன், இந்த ஆதாயங்கள் மிகவும் முக்கியமாகும். இதன் மூலம் இலங்கை ஏனையவர்களுக்கு சிறந்த உதாரணமாக திகழ்கின்றது. எனவே, சுகாதாரமும் கல்வியும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சர்வதேச சமூகத்திடம் இது தொடர்பில் உன்னிப்பான கவனத்தை செலுத்த நான் அழைப்பு விடுக்கின்றேன். சுகாதாரம் மற்றும் கல்விக்கான முதலீடு தொடர்பிலான கலந்துரையாடலில் எவ்வித விட்டுக்கொடுப்புகளும் இருக்கக்கூடாது.'' 

பிரதான உணவினை பெற்றுக்கொள்ள முடியாமையினால், பல குடும்பங்கள் வழமையாக உட்கொள்ளும் உணவினைத் தவிர்ப்பதாகவும்  அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் பிள்ளைகள் பட்டினியுடன் நித்திரைக்கு செல்வதாகவும் George Laryea-Adjei தெரிவித்துள்ளார். 

இந்த நிலைமை தொடருமானால், இலங்கையில் கடின உழைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட  குழந்தைகள் விடயத்திலான முன்னேற்றம் தலைகீழாக மாறும் எனவும் சிலவேளைகளில் அது நிரந்தரமாக இழக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். 

குழந்தைகளின் போஷாக்கு குறைபாட்டில் சர்வதேச ரீதியில் இலங்கை 6 ஆவது இடத்தில் உள்ளது. 
 
நாட்டில்  ஏற்பட்டுள்ள விலையேற்றம் காரணமாக போசாக்கான உணவினை உட்கொள்ள முடியாத நிலைக்கு பல குழந்தைகளும் கர்ப்பிணித் தாய்மார்களும் தள்ளப்பட்டுள்ளனர்.