.webp)
Colombo (News 1st) ஜனாதிபதி வழங்கிய நிபந்தனையுடனான பொதுமன்னிப்பில் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை வரவேற்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக பெருந்திரளானவர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் ஒன்றுகூடியிருந்தனர்.
அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் சிறைச்சாலை வளாகத்திற்கு வந்திருந்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவை வௌிநாட்டு பணியாளர்களின் நலன்புரி, ஊக்குவிப்பு தூதுவராக நியமிப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தார். அதுவொரு தன்னார்வ பதவி எனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, தேசியப் பட்டியில் வெற்றிடமொன்று ஏற்பட்டால் முதல் வாய்ப்பு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் சுயாதீனமாக செயற்படுவதே தனது அடுத்த திட்டம் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலையானதன் பின்னர் முதலில் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு ஹூணுபிடிய கங்காராம விகாரைக்குச் சென்றார்.
அங்கு சமய வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், கங்காரம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரரிடம் ஆசி பெற்றுக்கொண்டார்.
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக்கோரியதுடன், ஜனாதிபதி இன்று அவரை விடுதலை செய்வதற்கான ஆவணத்தில் கைச்சாத்திட்டார்.