.webp)
Colombo (News 1st) ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தானிஷ் அலி உள்ளிட்ட 07 சந்தேகநபர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே அவர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள லஹிரு வீரசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே, ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து, படுக்கை விரிப்பை திருடிய குற்றச்சாட்டில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் 36 சந்தேகநபர்கள் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 35 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உள்ளிட்ட முன்பிணை பெற்ற சந்தேகநபர்களும் இன்று மன்றில் முன்னிலையாகினர்.
பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்து, சொத்துகளுக்கு சேதம் விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பியத் நிகேசல, பலாங்கொடை காசியப்ப தேரர் ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்
கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்
இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.