.webp)
Colombo (News 1st) கடந்த ஜூலை 09 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய இன்று பிரதி பொலிஸ்மா அதிபர் தமயந்த விஜயஶ்ரீயிடம் விசாரணைகள் இடம்பெற்றன.
ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட தினத்தில், குறித்த இடத்தின் பாதுகாப்பு தொடர்பான கட்டளையை அப்போதைய பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாம் ஜமால்டீன் வழங்கியதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ இதன்போது தெரிவித்தார்.
நிசாம் ஜமால்டீனின் கீழ் பொலிஸ், விசேட அதிரடிப்படை, பிரதமரின் பாதுகாப்பு பிரிவிற்குட்பட்ட பொலிஸார் மற்றும் விமானப்படையின் விசேட குழுவொன்றும் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூறினார்.
இந்த 4 பிரிவுகளிலும் தொடர்புடைய அதிகாரிகள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாம் ஜமால்தீனுக்கு அறிக்கையிட்டதாகவும், அவரின் கட்டளையின் பேரில் செயற்பட்டதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ மேலும் குறிப்பிட்டார்.