.webp)
Colombo (News 1st) அதானி குழுமம் தமது புதிய முதலீடுகளை கடன் பெற்று மேற்கொண்டு வருவதால், பாரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக Fitch Ratings-ஐ தாய் நிறுவனமாகக் கொண்ட CreditSights நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கடன்கள் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளைத் தோற்றுவிக்கும் எனவும் CreditSights நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதானி குழுமத்தின் வரவு செலவு கணக்குகளுக்கு அமைய, அந்த நிறுவனத்தின் கடன் விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனத்தை மேற்கோள் காட்டி இணையத்தளங்களில் செய்திகள் வௌியிடப்பட்டுள்ளன.
அதானி குழுமத்தின் பணப்புழக்கமும் கடன் பெறும் தகுதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக CreditSights குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலை தொடருமாயின், பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் கடன் சுமைக்குள் அதானி நிறுவனம் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுமென CreditSights எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த ஆய்வறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளன.
அதானி நிறுவனத்தின் 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் பங்குகள் 3 முதல் 5 வீதம் கடும் சரிவை எதிர்நோக்கியுள்ளன.