.webp)
Colombo (News 1st) பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஓரளவு நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் நிலையில், இன்று மக்கள் போராட்ட செயற்பாட்டாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டதுடன், சிலர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான போராட்டத் தேசிய அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சேனாதி குருகே மத்திய குற்றவியல் விசாரணை அலுவலகத்தினால் இன்று கைது செய்யப்பட்டார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து சென்று கொண்டிருந்த போது, வொக்ஸ்ஹால் வீதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சட்டத்தரணியொருவர் அவ்விடத்திற்கு வருவதற்கு முன்னதாக சேனாதி குருகே பயணித்த முச்சக்கர வண்டியிலேயே அவரை பொலிஸார் அழைத்துச்சென்றனர்.
இரண்டு இராணுவ வீரர்களை கடத்திச்சென்று தாக்குல் மேற்கொண்டதாகவே சேனாதி குருகே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாளை (25) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சேனாதி குருகே கைது செய்யப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு இன்று பிற்பகல் சென்றிருந்தார்.
எனினும், எதிர்க்கட்சித் தலைவருக்கு சேனாதி குருகேயை சந்திப்பதற்கு பொலிஸார் சந்தர்ப்பம் வழங்கவில்லை.