.webp)

Colombo (News 1st) கடந்த ஜூலை 9 அம் திகதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அறிக்கையிடச் சென்ற நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், MTV Channel தனியார் நிறுவனம் செய்துள்ள முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளுக்கு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் தற்போதைய பணிப்பாளரும் அவ்வேளையில் பிரதமர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும் செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாம் ஜமால்டீன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க, ஆணையாளர் அனுசுயா சண்முகநாதன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில், அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் மனித உரிமைகள் அணைக்குழுவில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் ஆணைக்குழு அதனை நிராகரித்தது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், நிசாம் ஜமால்டீன் கருத்து தெரிவிக்கவில்லையாயின், ஊடகவியலாளர்களுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிப்பதற்கு விடயங்கள் இல்லையென கருதி தீர்ப்பு வழங்குவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, செப்டம்பர் 9 ஆம் திகதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாம் ஜமால்டீனுக்கு அறிவிக்கப்பட்டது.
தமது சேவை வழங்குநருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தான் அறிவித்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்பில் ஆணைக்குழுவில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா தெரிவித்தார்.
அந்த வழக்கின் அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து தமது சேவை வழங்குனரிடம் ஆலோசனைகளைப்பெறவுள்ளதால் ஜமால்டீனிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்வதற்கு விருப்பம் இல்லையென அவர் ஆணைக்குழுவிற்கு அறிவித்தார்.
இன்று வாக்குமூலம் வழங்கினால் அவரது பிரதிவாதி தரப்பு அறிக்கைக்கு பாதிப்பு ஏற்படுமென தாம் கருதுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இதனால் இன்றைய தினம் வாக்குமூலம் வழங்க வேண்டாம் என தாம் அவருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனித உரிமை வழக்கு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று நடைபெறும் விசாரணை என்பன முற்றிலும் இரண்டு விசாரணைகள் என MTV Channel தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தமித்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் விசாரணையை நிறுத்துவதற்கு எந்தவொரு நீதிமன்றமோ அல்லது நிறுவனமோ இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கவில்லை என சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், விசாரணைக்கு பல திகதிகள் அறிவிக்கப்பட்டு, இன்று இறுதி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தும், விசாரணைகளை பிற்போடுவது MTV நிறுவனத்திற்கும் ஊடகவியலாளர்களின் உரிமைக்கும் விடுக்கப்படும் பாரபட்சம் என சட்டத்தரணி தமித்த கருணாரத்ன இதன்போது தெரிவித்துள்ளார். மிக விரைவில் இறுதி தீர்மானத்தை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலக்கம் 21 சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தௌிவின்றி ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா கருத்து வௌியிட்டுள்ளதை தான் புரிந்துகொண்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி இரண்டு தரப்பினரதும் விடயங்களை ஆராய்ந்த பின்னர் தெரிவித்தார்.
ஆணைக்குழுவில் விசாரணையும், உயர் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணையும் இரண்டு விடயங்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
உயர் நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த விசாரணையை நிறுத்த முடியாது என சுட்டிக்காட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி ரோஹினி மாரசிங்க, ஆணைக்குழுவின் விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என தௌிவுபடுத்திக் கூறினார்.
விசாரணைகளுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாம் ஜமால்டீனின் சாட்சி முக்கியம் என்பதனால், அதனை வழங்க வேண்டிய சந்தர்ப்பத்தில் வழங்காமல் விடுவது சட்டத்தின் படி செய்யக்கூடாத விடயம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி இதன்போது சுட்டிக்காட்டினார்.
