மேர்வின் சில்வா பிணையின்றி விடுவிப்பு

மேர்வின் சில்வா பிணையின்றி விடுவிப்பு

by Bella Dalima 18-08-2022 | 7:15 PM

Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு பிணை வழங்குவது தேவையற்றது எனவும் நவம்பர் 16 ஆம் திகதி அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால் போதுமானது எனவும் தெரிவித்து அவரை விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று உத்தரவிட்டார்.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அத்துமீறி நுழைந்து சிறு காயங்களை ஏற்படுத்தியமை, அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் மேர்வின் சில்வா இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் போது, 75 வயதான தமது சேவை பெறுநர் தாக்கப்பட்டதாகவும், பல்வேறு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரை தகுந்த பிணையில் விடுவிக்குமாறும் அவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, களனியில் பசு வதையை தடுத்து நிறுத்திய சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிணை வழங்குவது தேவையற்றது எனவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால் போதுமானது எனவும் மேலதிக நீதவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவித்தலின் பேரில், தமது சேவை பெறுநர் தாமாக முன்வந்து திணைக்களத்தில் ஆஜரானதாக மேர்வின் சில்வா சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.