நோர்வே அதிகாரியுடன் தமிழ் கட்சிகள் கலந்துரையாடல்

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான விசேட அதிகாரியுடன் தமிழ் கட்சிகள் கலந்துரையாடல்

by Bella Dalima 18-08-2022 | 7:33 PM

Colombo (News 1st) நோர்வே வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான விசேட அதிகாரி ஆன் கிளாட்டுடன் 6 தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா,  தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்   C.V.விக்னேஸ்வரன்,  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான  சிறிதரன், கோவிந்தன் கருணாகரம் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல், சமூக விடயதானங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

ஐ.நா-வில் பல்வேறு விதமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை அவதானிக்க முடிவதாக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெறுகின்ற கைது ஆகிய விடயங்களை அவர்கள் நோர்வே பிரதிநிதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடருக்கு தாங்கள் தயாராகிக் கொண்டு இருப்பதனால், தமிழ் மக்களின் சார்பாக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் தெரிவித்த கருத்துகளை  நோர்வே அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, அவற்றை ஐ.நா-வில் பிரதிபலிக்கும் வகையில் செயற்படுவதாகவும்  ஆன் கிளாட் உறுதியளித்ததாக  தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்தார்.