இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சமுத்திர கண்காணிப்பு விமானம்

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சமுத்திர கண்காணிப்பு விமானம்

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2022 | 6:43 pm

Colombo (News 1st) இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டோனியர் 228 ரக சமுத்திர கண்காணிப்பு விமானம்(Dornier Reconnaissance Aircraft) இன்று(15) பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பாரதத்தின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட இந்த விமானத்தை கையேற்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றிருந்தார்.

டோனியர் 228 ரக சமுத்திர கண்காணிப்பு விமானத்தை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

விமானப்படையால் ஜனாதிபதிக்கு இதன்போது மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர். 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த கண்காணிப்பு விமானத்தை கையேற்றதன் பின்னர் ஜனாதிபதியும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் விமானத்தை பார்வையிட்டனர். 

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் DO – 228 வகையான 3 டோனியர் விமானங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன் அதன் முதலாவது விமானம் இன்று(15) இலங்கையில் தரையிறக்கப்பட்டது. 

2018ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதுடெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின் போது, இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய முதலிரண்டு வருடங்களுக்கு விமானத்தை இலவசமாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்திருந்தது.

புதிய விமானங்களை தயாரிப்பதற்கு 2 வருடங்கள் தேவை என்பதால் குறித்த விமானம் 2 வருடங்களுக்கு இந்தியாவினால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த சமுத்திர கண்காணிப்பு விமானமானது இலங்கை கடற்பரப்பில்  உளவு நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டிற்கு அமைய முதலாவது விமானம் வழங்கப்பட்டதன் பின்னர் 5 இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் கொண்ட குழுவும் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

தமது பலத்தை இந்து சமுத்திர வலயம் மற்றும் வங்காள விரிகுடாவை அண்மித்த அயல் நாடுகளின் பலத்துடன் இணைப்பதற்கான சந்தர்ப்பம் இதுவென கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

பாதுகாப்பு தொடர்பான பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இந்தியாவினதும் இலங்கையினதும் பாதுகாப்பு மேம்படும் என தாம் நம்புவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். 

அதற்காக இந்தியா வழங்கிய புதிய அனுசரணையாகவே இது அமைந்துள்ளதாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்