நீதிமன்றில் சரணடைந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை

நீதிமன்றில் சரணடைந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை

நீதிமன்றில் சரணடைந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை

எழுத்தாளர் Rajalingam Thrisanno

12 Aug, 2022 | 6:17 pm

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஆஜரான போது அவருக்கு பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

இதற்கமைய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அருட்தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மத்திய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு முன்வைத்த  கோரிக்கையை நீதவான் இன்று நிராகரித்தார்.

அருட்தந்தைக்கு வௌிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்ட நீதவான் நாளை காலை கொழும்பு மத்திய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவுக்கு சென்று வாக்குமூலம் அளிக்குமாறும் அருட்தந்தைக்கு அறிவித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அர்சகுலரத்ன ஊடாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தமது சேவை பெறுநர் நீதிமன்றத்தை புறந்தள்ளுவதற்கான எந்தவொரு தேவையும் இல்லையென தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, அருட்தந்தையை கைது செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்ட மாஅதிபரால் விடயங்கள் முன்வைக்கப்பட்ட போதே இந்த வழக்கு தொடர்பில்  அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நீதிமன்றத்தில் சரணடைந்த அருட்தந்தையை பொருத்தமான பிணையின் கீழ் விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார்.

சந்தேகநபரான அருட்தந்தை ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்து ஊடக சந்திப்பு நடத்தி பொதுமக்களை தூண்டிவிட்டதாக கொழும்பு மத்திய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தமது சேவை பெறுநர், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காது அமைதியான முறையில் இந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுமாறு ஊடக சந்திப்பின் ஊடாக பொதுமக்களிடம் கோரியதாக ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்குள் 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் காணாமல் போயுள்ளதாகவும் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த கொழும்பு மத்திய பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினர், சந்தேகநபரான அருட்தந்தைக்கு பிணை வழங்குவதை ஆட்சேபித்திருந்தனர். 

வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்