தற்காலிகமாக தாய்லாந்தில் தங்கும் கோட்டாபய ராஜபக்ஸ

வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடம் கிடைக்கும் வரை கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தில் தங்கியிருப்பார் - தாய்லாந்து பிரதமர்

by Rajalingam Thrisanno 11-08-2022 | 6:18 PM

வேறொரு நாட்டில் நிரந்தர புகலிடத்தை பெற்றுக்கொள்ளும் வரை  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தற்காலிகமாக தாய்லாந்தில் தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒச்சா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பான விடயம் மனிதாபிமான பிரச்சினை என்பதால் அவருக்கு தற்காலிகமாக தாய்லாந்தில் தங்க அனுமதியளிப்பதாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தெரிவித்ததாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்தில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் எந்தவொரு அரசியல் விவகாரங்களிலும் தலையிட முடியாது எனவும் இந்த சந்தர்ப்பத்தில் அவர் வேறு நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் தாய்லாந்து பிரதமர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாய்லாந்துக்கு வருகை தந்தால் தமது நாட்டுக்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படக்கூடாது என தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸவின் இருப்பிட வசதிகள் தொடர்பாக தாய்லாந்து அரசாங்கம் எவ்வித பொறுப்பையும் ஏற்காது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ இன்று சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினூடாக இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனி சங்கரத் நேற்று   ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இரு நாடுகளிடையேயும் காணப்படும் ஒத்துழைப்பு காரணமாக இந்த கோரிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதெனவும் அவர் கூறியுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி இராஜதந்திர கடவுச்சீட்டின் உரிமையாளர் என்பதுடன் 2013ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் 90 நாட்களுக்கு வீசா இன்றி தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும் எனவும் தனீ சங்கரத் தெரிவிக்கிறார். 

இந்தப் பயணம் தற்காலிகமானது எனவும் எதிர்கால பயணங்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச இதுவரை தமது நாட்டில் அரசியல் தஞ்சம் கோரவில்லை என தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.