சுற்றுலா வாகனங்களுக்கு எரிபொருள்

சுற்றுலா வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க விசேட திட்டம்

by Rajalingam Thrisanno 11-08-2022 | 7:00 PM

சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கு விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வாகனங்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வித அசௌகரியங்களும் இன்றி சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் சுற்றுலாவில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த  திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சுற்றுலாத்துறையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு இணையதளத்தினூடாக அறிவிக்க வேண்டும்.

அதிகார சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து உரிய படிவத்தினை பூரணப்படுத்துவதனூடாக சுற்றுலா பயணிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது.

இந்த அனுமதியூடாக இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களூடாக பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்தார்.

குறித்த அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் டீசலை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக விமான நிலையத்திலேயே அனுமதிப்பத்திரம் ஒன்றை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.