.webp)
சீனாவின் யுவான் வேங் 5 அதி நவீன உளவு கப்பல் இன்று(11) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்த போதிலும் அந்த கப்பல் தற்போது இலங்கையிலிருந்து 600 கடல் மைல் தொலைவில் இந்து சமுத்திரத்தில் பயணிக்கின்றது.
இன்றைய (11) தினம் அந்த கப்பல் இலங்கையை வந்தடையாது என ஹாபர் மாஸ்டர் நியூஸ் ஃபெர்ஸ்டுக்கு தெரிவித்தார்.
தமது அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்காது என அவர் கூறினார்.
குறித்த கப்பல் இலங்கைக்கு வருவதை தாமதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சு கோரியுள்ள போதிலும் துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
சீன உயர் தொழிநுட்ப கப்பலான யுவான் வேங் 5 ஜூலை 14 ஆம் திகதி சீனாவிலிருந்து புறப்பட்டு எந்தத் துறைமுகத்திற்கும் செல்லாமல் இலங்கையை நோக்கி பயணித்தது.
இதனால் கடந்த 28 நாட்களாக இந்த கப்பலுக்கு தேவையான எரிபொருள் உணவு மற்றும் பானங்கள் மீள் நிரப்பப்படவில்லை.
ஜூன் 28 ஆம் திகதி சீனத் தூதரகம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்த கப்பல் ஜூலை 12 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதற்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.
எனினும், அந்த கப்பல் இந்து சமுத்திரத்திற்குள் நுழைந்ததன் பின்னர் கடந்த 8 ம் திகதி கப்பலை தாமதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தது.
இந்த தீர்மானத்திற்கான காரணத்தை வெளிவிவகார அமைச்சு வெளியிடவில்லை என்பதுடன் குறித்த கப்பல் தமது நாட்டின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை தவிர்த்துகொள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, நேற்று(10) இலங்கையின் திசையிலிருந்து வேறு திசையை நோக்கி திரும்பி பயணித்த சீன ஆய்வு கப்பலான யுவான் வேங் 5 இன்று(11) மீண்டும் இலங்கை நோக்கி பயணித்தது.
இந்த கப்பல் இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடாவை நோக்கி பயணிக்கின்றது.
AIS தரவுகளின் கண்காணிப்பின் பிரகாரம் சீன கப்பல், இலங்கைக்கு அருகிலுள்ள நைன்ரி ஈஸ்ட் ரிட்ஜ் எனப்படும் கடலுக்கடியிலுள்ள மலைத் தொடருக்கு மேலாக பயணிக்கின்றது.
நேற்றுமுன்தினம் (09) இரவு முதல் பயணப் பாதையை மாற்றிய கப்பல் மிகவும் குறைந்த வேகத்தில் கடலுக்கடியிலுள்ள நைன்ரி ஈஸ்ட் ரிடிஜ் மலைத் தொடருக்கு மேலாக பயணிப்பதை அவதானிக்க முடிந்தது.
சீனா கடந்த 2 வருடங்களாக ஷியாங் யேன்ங் ஹொங்க் எனப்படும் கண்காணிப்பு கப்பல் தொகுதியை பயன்படுத்தி குறித்த பகுதியில் ஆய்வுகளையும் மேற்கொண்டிருந்தது.
இதேவேளை, பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்காக சீனாவில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ள தைமூர் போர்க்கப்பல் நாளை(12) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என ஹார்பர் மாஸ்டர் உறுதிப்படுத்தினார்.
இந்த கப்பல் இலங்கைக்கு வருகை தருகின்றமை தொடர்பில் இந்தியா அண்மையில் தமது அவதானிப்புக்களை வௌிப்படுத்தியிருந்தது.
தமது நாட்டின் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு பங்களாதேஷ் மறுப்பு தெரிவித்ததன் காரணமாகவே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கி செலுத்தப்படுகிறது.