நாட்டின் சராசரி வறுமைக் கோடு இரண்டு மடங்காக அதிகரிப்பு

by Bella Dalima 10-08-2022 | 8:59 PM

Colombo (News 1st) கடந்த நான்கு வருடங்களில் நாட்டின் வறுமைக் கோடு சுமார் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

வறுமைக் கோடு (Poverty line) என்பது வறுமையை வரையறுக்கப் பயன்படும் ஓர் அளவுகோல் ஆகும். 

குறைந்தபட்ச நுகர்வுத் தரத்தைக் கூட பெற முடியாதவர்கள் வறுமைக் கோட்டில் வாழ்பவர்களாக கருதப்படுகின்றார்கள். 

வருமானம் தவிர்த்து ஒருவர் உட்கொள்ளும் உணவின் அளவைப் பொறுத்தும் வறுமைக் கோடு வரையறுக்கப்படுகிறது.  

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாத தரவுகளின் படி, நாட்டின் சராசரி வறுமைக் கோடு 12,444 ரூபாவாக அதிகரித்துள்ளது. 

2019 ஆம் ஆண்டு நாட்டின் சராசரி வறுமைக் கோட்டு வீதம் 6966 ரூபாவாக காணப்பட்டது. தரவுகளின்படி கொழும்பு மாவட்டத்திலேயே மக்களின் மாதாந்த செலவு அதிகளவில் அதிகரித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் சராசரி வறுமைக்கோட்டு வீதம் 13,421 ரூபாவாக அமைந்துள்ளது.

அதற்கு அடுத்த படியாக நுவரெலியா, கேகாலை மற்றும் பதுளை  மாவட்டங்களிலும் நாட்டின் சராசரி செலவுகளை விட மக்களின் செலவுகள் அதிகரித்துள்ளன.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின் படி  2020 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் ஒரு தனிநபருக்கு அடிப்படைத் தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்வதற்கு மாதத்திற்கு 5,475 ரூபா தேவைப்பட்டது.

திணைக்களத்தின் புதிய தரவுகளின் படி தற்போது நுவரெலியா மாவட்டத்தில் தனிநபருக்கு அடிப்படைத் தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்வதற்கு மாதத்திற்கு 13,087 ரூபா தேவைப்படுகிறது. 

சாதாரணமாக ஒரு குடும்பத்தில் ஐவர் இருந்தால், அந்த குடும்பத்திற்கு அடிப்படை செலவுகளுக்கு மாத்திரம் 65,435 ரூபா அவசியமாகும் என அரசாங்கமே கூறுகிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபா சம்பளம் கிடைத்தாலும் மாதாந்தம் அவர்களுக்கு 30,000 ரூபாவே வருமானமாக கிடைக்கும்.

இந்தப் பின்புலத்தில் தற்போதைய சூழ்நிலையில் 1000 ரூபா கொடுப்பனவு போதுமானதா?